மேலாண் இயக்குனருக்கு எதிராக போராட்டம்: பாண்லே ஊழியர்கள் 7 பேர் பணியிடை நீக்கம்

பாண்லே மேலாண் இயக்குனருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2020-01-06 22:45 GMT
புதுச்சேரி, 

புதுவை அரசு சார்பு நிறுவனமான பாண்லேவில் 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் வெளிமாநிலங்களில் இருந்து பால் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடப்பதாக அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டின.

நிர்வாக சீர்கேட்டினால் இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சாரங்கபாணி பல நாட்களாக அலுவலகத்துக்கு வரவில்லை என்று ஊழியர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

இதையொட்டி கடந்த 26-ந் தேதி பாண்லே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பால் சப்ளை பாதிக்கப்பட்டது.

ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த தொகுதி எம்.எல்.ஏ.வான தீப்பாய்ந்தானை பாண்லே அலுவலகத்துக்குள் அனுமதிக்காததுடன் அவரை ஊழியர்கள் திருப்பி அனுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களான வெங்கடேசன், சரவணகுமார், துரைமுருகன், ராஜசேகர், சுப்புராயலு, மகேஷ், சுப்ரமணி ஆகிய 7 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 11 ஊழியர்கள் உற்பத்தி, கொள்முதல், விற்பனை, தலைமை அலுவலகம் ஆகிய பிரிவுகளுக்குள் பணியிட மாற்றமும் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நடவடிக்கை பாண்லே ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்