மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு - 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன்பெறும்

மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீரை கலெக்டர் கிரண்குராலா திறந்து விட்டார். இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன்பெறும்.

Update: 2020-01-06 22:30 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே உள்ள மணிமுக்தா அணையின் மொத்த கொள்ளளவு 36 அடியாகும். கடந்த இரண்டு மாதங்களாக கல்வராயன்மலையில் பலத்த மழை பெய்தது. இதனால் மணி ஆறு,முக்தா ஆற்றின் முலம் மழைநீர் அதிகளவில் அணைக்கு வந்து அணையின் நீர்மட்டம் 30.60 அடியாக உயர்ந்தது. இந்த நிலையில் சம்பா பருவத்தில் பயிர் சாகுபடி செய்ய பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் வைத்த கோரிக்கையை ஏற்று பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

இதனையொட்டி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார். முன்னாள் அமைச்சர் மோகன்,தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவர் ராஜசேகர்,கடலூர் வெள்ளாறு வடிநில கண்காணிப்பு பொறியாளர் ரவிமனோகர் கள்ளக்குறிச்சி வெள்ளாறு வடிநில உதவி செயற்பொறியாளர் சிங்காரவேல்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு 60 கன அடி வீதமும், பழைய பாசன ஆற்றில் வினாடிக்கு 15 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதன் பிறகு அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் 25-ந் தேதி வரை 45 நாட்களுக்கு புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு 56 கனஅடி வீதமும்,பழைய பாசனம் ஆற்றில் வினாடிக்கு 15 கனஅடி வீதமும் நீர் திறந்து விடப்படும். இதன் மூலம் அகரக்கோட்டாலம், அணைக்கரை கோட்டாலம், வாணியந்தல், தண்டலை, பெருவங்கூர், வீரசோழபுரம், வீ.பாளையம், மாடுர், நிறைமதி, நீலமங்கலம், குருர், பல்லகச்சேரி, சுளாங்குறிச்சி, சித்தலூர், உடையநாச்சி, கூத்தக்குடி உள்படபல கிராமங்கள் பயன்பெறும்.

இதன் மூலம் நேரடியாக 5,890 ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக 14 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும்.இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் பச்சையாப்பிள்ளை, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அரசு, அருணகிரி, முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் சீனுவாசன்,ஒன்றிய பேரவை செயலாளர் பாலசுந்தரம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தனலட்சுமி கந்தசாமி,ஆறுமுகம்,மணிமுக்தா அணை உதவிபொறியாளர் கணேசன்,கூட்டுறவு சங்க தலைவர் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்