குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து 3 கி.மீ.தூர மனிதசங்கிலி போராட்டம்

குமுளி பஞ்சாயத்து சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து 3 கி.மீட்டர் தூர மனிதசங்கிலி போராட்டம் நடந்தது.;

Update:2020-01-08 04:00 IST
குமுளி,

மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதை கண்டித்தும், சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும் குமுளி பஞ்சாயத்து சார்பில் நேற்று காலை 11 மணி முதல் 12 மணி வரை ஒரு மணி நேரம் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் பாரதீய ஜனதா கட்சி நீங்கலாக அனைத்து கட்சியினர், தொழிற்சங்கத்தினர், விவசாயிகள், வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குமுளியில் தமிழக எல்லையிலிருந்து தொடங்கி செழிமடை என்னும் பகுதிவரை 3 கி.மீட்டர் தூரம் நடந்த இந்த மனித சங்கிலி போராட்டத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் பலர் தேசிய கொடி ஏந்தி இருந்தனர்.

இதுபற்றி குமுளி பஞ்சாயத்து தலைவி ‌ஷிபா சுரே‌‌ஷ் கூறுகையில், கடந்த வாரம் நடந்த குமுளி பஞ்சாயத்து கமிட்டியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது என்று தெரிவித்தார்.

இது போல குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் முஸ்லிம்கள் அமைப்பு சார்பில் மறையூரில் கண்டன ஊர்வலம், பொதுக்கூட்டம் நடைபெற்றது. மறையூர் பாபுநகரிலிருந்து தொடங்கிய ஊர்வலத்தை தேவிகுளம் ஒன்றிய துணைத்தலைவர் உ‌ஷா ஹென்றிஜோசப் தொடங்கிவைத்தார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கண்டன கோ‌‌ஷங்களை எழுப்பினார்கள். ஊர்வலம் மறையூர் பஸ்நிலையம் அருகே முடிவடைந்தது.

பின்னர் அங்கு பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.கே.மணி, தேவிகுளம் ஒன்றிய தலைவர் ராதாகிரு‌‌ஷ்ணன், மறையூர் பஞ்சாயத்து தலைவர் ஆரோக்கியதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மறையூர் வட்டார செயலாளர் சிஜிமோன், மாவட்ட கமிட்டி உறுப்பினர் லட்சுமணன், மறையூர் ஜும்மா மஜித் இமாம் அலி பைசி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்