மத்திய பிரதேசம்: 42 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்

மத்திய பிரதேசத்தில் பெயர்கள் நீக்கத்திற்கு பின்னர் வாக்காளர் இறுதி பட்டியலில் 5 கோடியே 31 லட்சத்து 31 ஆயிரத்து 983 பேர் உள்ளனர்.;

Update:2025-12-23 21:42 IST

போபால்,

பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நடப்பாண்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடைபெற்றன. இதேபோன்று, நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, மத்திய பிரதேசம், தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக மத்திய பிரதேசத்தில், நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து வீடு, வீடாக விண்ணப்ப படிவங்களை வாக்கு மைய நிலை அலுவலர்கள் வழங்கினர். நவம்பர் 4-ந்தேதி தொடங்கி டிசம்பர் 4-ந்தேதியுடன் இந்த பணிகள் முடிந்தன. எனினும், காலநீட்டிப்பு அடிப்படையில், சத்தீஷ்கார், அந்தமான் நிகோபர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் 18-ந்தேதி வரை படிவங்கள் பெறப்பட்டு, 23-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், மத்திய பிரதேசத்தில் 42 லட்சத்து 74 ஆயிரத்து 160 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன.

இதுவரை இருந்த, மொத்தம் 5 கோடியே 74 லட்சத்து 6 ஆயிரத்து 143 வாக்காளர்களில், இன்று, 5 கோடியே 31 லட்சத்து 31 ஆயிரத்து 983 வாக்காளர்களே உள்ளனர் என இறுதி பட்டியல் தெரிவிக்கின்றது.

நீக்கப்பட்ட வாக்காளர்களில் 8 லட்சத்து 46 ஆயிரத்து 184 வாக்காளர்கள் உயிரிழந்தும், 8 லட்சத்து 42 ஆயிரத்து 677 வாக்காளர்கள் அந்த முகவரியில் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. 22.78 லட்சம் பேர் புலம்பெயர்ந்தும், 2.76 லட்சம் பேர் போலி வாக்காளர்கள் மற்றும் மற்றவர்கள் 29,927 பேரும் நீக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்