பழனியில் பரபரப்பு: மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகியை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகியை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பழனியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-01-07 22:00 GMT
பழனி,

பழனி அடிவாரம் பகுதியில் உள்ள கிழக்கு பாட்டாளி தெருவில் வசித்து வருபவர் தமிழரசு. இவருக்கு சொந்தமான வீட்டை, மாலதி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். மாலதி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் பழனி நகர தலைவராக உள்ளார். இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக குடியிருந்து வரும் மாலதியை வீட்டை காலி செய்யுமாறு தமிழரசு கூறியதாக தெரிகிறது.

இது தொடர்பாக மாலதிக்கும், தமிழரசுவின் மனைவியான நதியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாலதி, நதியாவை கடித்தார். மேலும் கையில் கிடைத்த பொருட்களை வைத்து தாக்கினார். இதனால் நதியா காயம் அடைந்தார்.

இதனையடுத்து அவர் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த பழனி அடிவாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு மாலதியை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, மாலதி தங்கியிருக்கும் வீட்டுக்கு பல ஆண்கள் வந்து செல்கிறார்கள். சாலையின் நடுவே வாகனங்களை பலமணி நேரம் நிறுத்தி விட்டு மாயமாகி விடுகின்றனர். இதுகுறித்து கேட்டால் தகராறு செய்கின்றனர். மாலதியின் நடவடிக்கை பிடிக்காமல் வீட்டை காலி செய்ய சொன்னதால் தகராறு ஏற்பட்டது என்றனர்.

இதனையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே மாலதியை தாக்கியதாகவும், மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசியதாகவும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நூருல்ஹூதா தலைமையிலான சிலர் தமிழரசு-நதியா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். மாலதிக்கு ஆதரவாக மாற்றுத்திறனாளிகள் சங்கமும், வீட்டு உரிமையாளருக்கு ஆதரவாக அப்பகுதி பொதுமக்களும் திரண்டதால் பழனியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்