சிவமொக்கா, சிக்கமகளூரு, தார்வாரில் முழுஅடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு இல்லை

சிவமொக்கா, சிக்கமகளூரு, தார்வாரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை.

Update: 2020-01-08 22:45 GMT
சிவமொக்கா, 

மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்து கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் 8-ந் தேதி(அதாவது நேற்று) நாடு முழுவதும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தன.

இந்த முழுஅடைப்புக்கு கர்நாடகத்தில் பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்து இருந்தன. ஆனால் கர்நாடகத்தில் வழக்கம்போல அரசு பஸ்கள் இயங்கும் என்றும், பள்ளி, கல்லூரிகள் செயல்படும் எனவும் மாநில அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட நாடு முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. அதுபோல கர்நாடகத்திலும் பல்வேறு சங்கத்தினர் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினர். ஆனால் பெரும்பாலான மாவட்டத்தில் முழுஅடைப்புக்கு ஆதரவு இல்லை.

சிவமொக்கா மாவட்டத்தில் நேற்று முழுஅடைப்புக்கு பல்வேறு சங்கத்தினர் ஆதரவு கோரி இருந்தனர். ஆனால் அந்த மாவட்டத்தில் முழுஅடைப்புக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

அந்த மாவட்டத்தில் அரசு, தனியார் பஸ்கள் வழக்கம்போல இயங்கின. ஆட்டோக்கள், வாடகை கார்கள் ஓடின. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. விவசாய சங்கத்தினர், பல்வேறு தொழிற்சங்கத்தினர் மட்டும் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

இதுபோல சிக்கமகளூருவிலும் அரசு பஸ்கள் ஓடின. கடைகள், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டு இருந்தன. சினிமா காட்சிகள் திரையிடப்பட்டன. அரசு அலுவலகங்கள் திறந்து இருந்தன. சிக்கமகளூரு டவுனில் உள்ள பசவனஹள்ளியில் இருந்து ஆஜாத் பூங்கா வரை ஆஷா ஊழியர்களும், பகுஜன் சமாஜ் கட்சியினரும் ஊர்வலமாக புறப்பட்டு சென்று அங்கு சிறிது நேரம் போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ஆஷா ஊழியர்கள், பகுஜன் சமாஜ் கட்சியினர் கலெக்டர் பகாதி கவுதமை சந்தித்து மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

வடகர்நாடகத்தில் உள்ள முக்கிய மாவட்டங்களில் ஒன்றான தார்வாரிலும் முழுஅடைப்பு நடைபெறவில்லை. அந்த மாவட்டத்தில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் வழக்கம்போல இயங்கின. பெட்ரோல் விற்பனை நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டன. ஆனால் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மொத்தத்தில் இந்த 3 மாவட்டத்திலும் ஆதரவு கிடைக்காமல் முழு அடைப்பு பிசுபிசுத்து போனது.

மேலும் செய்திகள்