மேற்கு வங்காளம்: வாக்குச்சாவடி நிலை அலுவலர் தூக்கிட்டு தற்கொலை
எஸ்.ஐ.ஆர். பணிச்சுமை காரணமாகவே இஸ்லாம் தற்கொலை செய்துகொண்டதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.;
கொல்கத்தா,
பீகாரை தொடர்ந்து 2ம் கட்டமாக 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்றது. அதன்படி, தமிழ்நாடு, கேரளா, சத்தீஷ்கார், கோவா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான் நிக்பார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தபணி நடைபெற்றது.
இதையடுத்து அந்தந்த மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் மேற்குவங்காளத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 58 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படன. பேர் நீக்கப்பட்டவர்கள் தங்கள் பெயரை மீண்டும் பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம்களும் நடைபெற்று வருகின்றன.
அதேவேளை, அரசு ஊழியர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக செயல்பட்டு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியை மேற்கொண்டனர். மேலும், சிறப்பு முகாம்களிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பணிச்சுமை காரணமாக சிலர் தற்கொலை செய்யும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் புர்பா அலிபூர் கிராமத்தை சேர்ந்த ஹமீமுல் இஸ்லாம் (வயது 47) என்ற ஆசிரியர் வாக்குச்சாவடி நிலை அலுவலராக செயல்பட்டு வந்தார். ஆரம்பப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்த ஹமீமுல் இஸ்லாம் நேற்று பள்ளி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் ஹமீமுல் இஸ்லாமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இஸ்லாமின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, எஸ்.ஐ.ஆர். பணிச்சுமை காரணமாகவே இஸ்லாம் தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.