மூடநம்பிக்கையை ஒழிப்பதற்காக மகளின் பிறந்தநாளை மயானத்தில் கொண்டாடிய காங்கிரஸ் பிரமுகர்

மூடநம்பிக்கையை ஒழிப்பதற்காக, மகளின் பிறந்தநாளை மயானத்தில் காங்கிரஸ் பிரமுகர் கொண்டாடிய வினோத சம்பவம் பெலகாவி அருகே அரங்கேறி உள்ளது.

Update: 2020-01-09 22:30 GMT
பெலகாவி, 

பொதுவாக குழந்தைகளின் முதல் பிறந்தநாளை வீட்டிலோ அல்லது ஓட்டலிலோ பெற்றோர்கள் விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் பெலகாவியில் ஒருவர் தனது குழந்தையின் முதல் பிறந்தநாளை மயானத்தில் கொண்டாடி உள்ளார். இந்த வினோத சம்பவம் பற்றிய தகவல்கள் பின்வருமாறு:-

பெலகாவி மாவட்டம் சிக்கோடி அருகே வசித்து வருபவர் மகேஷ் சிங்கே. காங்கிரஸ் பிரமுகரான இவர் எமகனமரடி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சதீஷ் ஜார்கிகோளியின் ஆதரவாளர் ஆவார்.

மகேஷ் சிங்கேக்கு திருமணம் ஆகி மனைவியும், சிஷாபாய் என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தை சிஷாபாயின் முதல் பிறந்தநாளாகும். தனது மகளின் பிறந்தநாளை மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் வித்தியாசமாக கொண்டாட மகேஷ் சிங்கே முடிவு செய்தார். அதாவது அப்பகுதியில் உள்ள மயானத்தில் வைத்து மகளின் பிறந்தநாளை கொண்டாட மகேஷ் சிங்கே முடிவு எடுத்தார்.

மேலும் மகளின் பிறந்தநாளை மயானத்தில் வைத்து கொண்டாடுவது பற்றி தலித் தலைவர்கள், உறவினர்களிடம் கூறி இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் உள்ள மயானத்தில் வைத்து தனது குழந்தையின் பிறந்தநாளை கேக் வெட்டி மகேஷ் சிங்கே கொண்டாடினார்.

ஆடல், பாடல், இசையுடன் நடந்த இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் தலித் தலைவர்கள், பொதுமக்கள், மகேஷ் சிங்கேயின் உறவினர்கள் கலந்து கொண்டு குழந்தையை வாழ்த்தி சென்றனர். மேலும் பிறந்தநாள் பரிசும் அளித்து சென்றனர்.

இதுகுறித்து மகேஷ்சிங்கே கூறியதாவது, நான் மூடநம்பிக்கைக்கு எதிரானவன். மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையிலே எனது குழந்தையின் முதல் பிறந்தநாளை மயானத்தில் வைத்து கொண்டாடினேன் என்றார்.

சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போது மூடநம்பிக்கையை ஒழிப்பதாக கூறி சதீஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. இரவு மயானத்தில் தங்கி இருந்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது அவரது பாணியில் ஆதரவாளர் மகேஷ் சிங்கே மூடநம்பிக்கையை ஒழிப்பதற்காக மயானத்தில் வைத்து மகளின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்