பரமக்குடி தொழிற்பேட்டையில் விடிய விடிய தீ - ஏராளமான பொருட்கள் எரிந்து நாசம்

பரமக்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் விடிய விடிய தீப்பற்றி எரிந்ததால் ஏராளமான பொருட்கள் நாசமாயின.

Update: 2020-01-09 22:30 GMT
பரமக்குடி, 

பரமக்குடி புறநகர் பகுதியான தெளிச்சாத்தநல்லூரில் சிட்கோ தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு மின்வாரியத்திற்கு தேவையான உபகரணங்கள் தயாரித்தல் உள்பட 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு அங்குள்ள நிறுவனம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் சிலர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பிடித்து அடுத்தடுத்த நிறுவனங்களுக்கும் பரவி கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. உடனே தீயணைப்பு நிலையத்துக்கு கொடுத்த தகவலை தொடர்ந்து பரமக்குடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த முயன்றனர்.

ஆனாலும் தீ தொடர்ந்து மளமளவென பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனிடையே ராமநாதபுரம், கமுதி, முதுகுளத்தூர், மானாமதுரை ஆகிய ஊர்களில் இருந்தும் தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் 5-க்கும் மேற்பட்ட தனியார் வாகனங்கள் உதவியுடன் தீயணைப்பு துறையினர் நீண்டநேரம் தீயை அணைக்க போராடினர். தீவிபத்து ஏற்பட்டதும் அப்பகுதி முழுவதும் மின்சாரம் தடை செய்யப்பட்டது. நள்ளிரவு 2 மணியளவில் தீ ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தது. தொடர்ந்து விடிய விடிய எரிந்த தீ, காலை 9 மணிக்கு பின்பு முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் தெட்சிணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமான வாகன டயர்களை பொடியாக்கி வெளி மாநிலங்களுக்கு அனுப்பும் நிறுவனம், சுதர்சன் என்பவருக்கு சொந்தமான மசாலா மொத்த விற்பனை பொருட்கள், நாகராஜன் என்பவருக்கு சொந்தமான பற்றவைப்பு நிறுவனம், வினோத்குமார் என்பவருக்கு சொந்தமான காகித ஆலை ஆகியவை முழுமையாக எரிந்து நாசமாயின.தகவல் அறிந்து பரமக்குடி மண்டல துணை தாசில்தார் உமாதேவி, வருவாய் ஆய்வாளர் (பொறுப்பு) மீனாட்சி, பரமக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை ஆகியோர் தீ விபத்திற்கான காரணம் என்ன? என தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்