‘தர்பார்’ படத்தில் போலீஸ் பற்றி சர்ச்சை வசனம்: நடிகர் ரஜினிகாந்த் மீது தூத்துக்குடி கோர்ட்டில் வழக்கு

‘தர்பார்‘ படத்தில் போலீஸ் பற்றி சர்ச்சை வசனம் உள்ளதாக கூறி, நடிகர் ரஜினிகாந்த் மீது தூத்துக்குடி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

Update: 2020-01-10 23:15 GMT
தூத்துக்குடி, 

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்‘ திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை சுபா‌‌ஷ்கரன் தயாரிப்பில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார்.

இந்த நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த முன்னாள் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் மரியமிக்கேல் என்பவர் தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தர்பார் படத்தில் சீருடை பணியாளர்களின் மனதை புண்படுத்தும் விதமாகவும், சீருடையை கொச்சைப்படுத்தும் வகையிலும் ஹிப்பி தலை, தாடியுடன் ரஜினிகாந்த் வருகிறார். படத்தில் போலீஸ் கமி‌‌ஷனராக ரஜினி பேசும் வசனத்தில், நான் கமி‌‌ஷனர் அல்ல, ரவுடி என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இது ஒட்டுமொத்த போலீஸ்துறை, ராணுவத்தை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது. இது வருங்கால இளைய சமுதாயம், போலீஸ்துறை மீது உள்ள நல்லெண்ணத்தை கெடுக்கும் வகையில் உள்ளது. ஆகையால் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் ரஜினிகாந்த் ஆகிய 3 பேர் மீதும் அவதூறு வழக்கு பதிவு செய்ய வேண்டும்‘ என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு மீதான விசாரணை வருகிற 21-ந் தேதி நடக்கிறது.

மேலும் செய்திகள்