தேவகோட்டை அருகே பயங்கரம்: கவுன்சிலர்கள் தங்கிய வீட்டில் பெட்ரோல் குண்டுவீசி, கார்களை நொறுக்கிய கும்பல் - வாலிபருக்கு அரிவாள் வெட்டு

கவுன்சிலர்கள் தங்கிய வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி, கார்களை 50 பேர் கும்பல் சேதப்படுத்தியது. மேலும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு அரிவாள் வெட்டும் விழுந்தது. இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-01-10 23:30 GMT
தேவகோட்டை,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றிய தேர்தலில் மொத்தம் 19 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் 7 கவுன்சிலர்கள் தி.மு.க.வை சேர்ந்தவர்கள். ஒருவர் தே.மு.தி.க. கட்சியைச் சேர்ந்தவர் மற்றும் 2 பேர் சுயேச்சை கவுன்சிலர்கள். அந்த 10 கவுன்சிலர்களும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புதுக்குறிச்சி கிராமத்தில் உள்ள தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட அமைப்பாளர் ராமகிருஷ்ணன் வீட்டில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை 7 மணிக்கு அவரது வீட்டிற்கு வந்த 50 பேர் கொண்ட ஒரு கும்பல் அங்கு நின்ற 4 கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். பின்னர் 2 கார்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதையடுத்து அங்கு பயங்கர சத்தம் கேட்டதால் வீட்டில் இருந்த ராமகிருஷ்ணன் மற்றும் அவரது தந்தை ஜெகநாதன் அம்பலம் ஆகியோர் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது அந்த கும்பல் அந்த கவுன்சிலர்களை தேடி வந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து உயிருக்கு பயந்த நிலையில் வீட்டின் கதவை அடைத்து விட்டு அந்த கிராமத்தில் உள்ள தங்களது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே கிராமமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதைத்தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் விஜய்(வயது24) என்பவரை அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த விஜய், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த தேவகோட்டை தாலுகா போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் ெதாடர்பாக கமுதி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் காளிமுத்து, அவரது மனைவி பாண்டியம்மாள் உள்பட 48 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பி்ன்னர் அந்த வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த 10 கவுன்சிலர்களும் ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கமுதிக்கு பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டனர். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்