அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியத்தை உடனடியாக அமைக்கவேண்டும் - தொழிலாளர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தல்

அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தை உடனடியாக அமைக்கவேண்டும் என்று தொழிலாளர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2020-01-11 22:30 GMT
புதுச்சேரி,

புதுவை மாநில தொழிலாளர் முன்னேற்ற சங்க அவசர ஆலோசனை கூட்டம் தெற்கு மாநில தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தொழிலாளர் முன்னேற்ற சங்க புதுவை மாநில தலைவர் அண்ணா அடைக்கலம் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் அகில இந்திய இணைப்பொதுச்செயலாளர் சுகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சங்கத்தின் வளர்ச்சி பணிகள், மே மாதம் 1-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ள மண்டல மாநாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் மாவட்ட மாநாடு குறித்து விளக்க உரையாற்றினார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., தெற்கு மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். கூட்டத்தில் பேரவை கவுன்சில் செயலாளர் அன்பழகன், பொருளாளர் காயாரோகணம், துணைத்தலைவர் சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

*அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் பலமுறை அறிவித்தும் இன்னும் வெற்று அறிவிப்பாக இருப்பதை கண்டிப்பது. தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு அந்த அறிவிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை சீரமைத்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து மீண்டும் இயக்கவேண்டும்.

*நலிவடைந்துள்ள பாரதி, சுதேசி, ரோடியர் மில்களை பழைய நிலையில் இல்லாமல் நவீன எந்திரங்கள் வாங்கி ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கவேண்டும்.

*மில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்குவதுடன் மாதந்தோறும் அவர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

*ரோடியர் மில் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த வருங்கால வைப்புநிதியை பி.எப். அலுவலகத்தில் உடனடியாக கட்ட வேண்டும்.

*விருப்ப ஓய்வுபெறும் மில் தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய பணிக் கொடையை உடனடியாக வழங்கவேண்டும்.

*அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பண்டிகைக்கால ஊக்கத்தொகை கடந்த ஆண்டு ரூ.500 வழங்கப்பட்டது. வருகிற ஆண்டுகளில் ஊக்கத்தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும்.

*புதுவை அரசின் கூட்டுறவு நிறுவனமான பாப்ஸ்கோ, பாசிக் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்குவதுடன் அவர்களின் பணிபாதுகாப்பினை அரசு உறுதி செய்யவேண்டும்.

*ஆட்டோ தொழிலாளர்களின் நலனை கருத்தில்கொண்டு ஆட்டோ நலவாரியம் அமைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு முன்வரவேண்டும்.

*அரசு அனுமதியின்றி புற்றீசல்போல் பெருகிவரும் இருசக்கர வாகன வாடகை நிலையத்தை உடனடியாக அரசு தடை செய்யவேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்