திருமங்கலம், கள்ளிக்குடி யூனியன் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி

திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி யூனியன்களில் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

Update: 2020-01-11 23:00 GMT
திருமங்கலம்,

திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி பகுதிக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் யூனியன் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. திருமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 16 வார்டுகளில் 12-ல் அ.தி.மு.க.வும், 3 வார்டுகளில் தி.மு.க.வும், 1 வார்டில் சுயேச்சையும் வெற்றி பெற்றன. அவர்கள் அனைவரும் மறைமுக தேர்தலில் தலைவரை தேர்வு செய்ய வாக்கு அளித்தனர்.

இதில் அ.தி.மு.க. கட்சியை சேர்ந்த 14-வார்டு கவுன்சிலர் லதா தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் மாலை நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் வளர்மதி அன்பழகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இதேபோல் கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள வார்டுகளில் 10 இடங்களை அ.தி.மு.க.வும், 4 இடங்களை தி.மு.க.வும் கைப்பற்றின. மறைமுக தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த 3-வது வார்டு ஒன்றியகவுன்சிலர் மீனாட்சிமகாலிங்கம் ஒன்றியத்தலைவராக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் நடைபெற்ற துணைத்தலைவர் தேர்தலில் கலையரசி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றார். பின்னர் அவர்கள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பாதுகாப்பு

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆர்.டி.ஓ. முருகேசன், மதுரை துணை ஆணையர் பிரேம்குமார், வட்டார வளர்ச்சி அதிகாரி உதயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு அருண் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்