போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்

தேனி அருகே சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2020-01-19 22:30 GMT
தேனி, 

தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பொம்மையகவுண்டன்பட்டி, கர்னல் ஜான் பென்னிகுவிக் புதிய பஸ்நிலையம் ஆகிய இடங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள் நடந்தது. அதில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்துகள் வழங்கப்பட்டது. பொம்மையகவுண்டன்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மாவட்டத்தில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், பஸ் நிலையங்கள், சந்தைகள் என மொத்தம் 830 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம்களில் 3 ஆயிரத்து 323 களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மலைக்கிராமங்களுக்கு 12 நடமாடும் குழுக்கள் மற்றும் 21 சிறப்பு மையங்கள் மூலம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் முகாம்களில் கலந்து கொள்ள இயலாத குழந்தைகளுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் 4 நாட்களுக்கு குழந்தைகளின் வீட்டிற்கு நேரடியாக சென்று போலியோ சொட்டு மருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட 1 லட்சத்து 2 ஆயிரம் குழந்தைகள் பயன் அடைகின்றனர்.

எனவே, பெற்றோர்கள் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோ நோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஜெகவீரபாண்டியன், மாவட்ட தாய், சேய் நல அலுவலர் சத்யா, தேனி அல்லிநகரம் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) அறிவுச்செல்வம், வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கம்பம் நகராட்சி பகுதிகளில் 25 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. கம்பம் புதிய பஸ்நிலையத்தில் நடந்த முகாமை நகராட்சி கமிஷனர் கமலா குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் அரசக்குமார், மேலாளர் முனிராஜ், சுகாதார ஆய்வாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர். கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குள்ளப்பகவுண்டன்பட்டியில் ஊராட்சி பள்ளியில் நடைபெற்ற முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுத்தாய் குணசேகரன் தொடங்கி வைத்தார். இதில் துணைத்தலைவர் ஜெயா, ஊராட்சி எழுத்தர் சந்திரன், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

உப்புக்கோட்டை ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தில் நடந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை ஊராட்சி தலைவர் மூர்த்தி தொடங்கி வைத்தார். இதில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவசியம் போலியோ சொட்டு மருந்து வழங்கவேண்டும் என்று அவர் அறிவுறுத்தி பேசினார். 

நிகழ்ச்சியில் சுகாதார பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நாகையகவுண்டன்பட்டியில் நடந்த முகாமை ஒன்றிய குழு தலைவர் ஜான் வாஞ்சிநாதன் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்தை வழங்கி தொடங்கி வைத்தார். ராயப்பன்பட்டியில் போலியோ சொட்டு மருந்து முகாமை ஊராட்சி தலைவர் பால்ராஜ் தொடங்கி வைத்தார். இதில் சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்றது.

மேலும் செய்திகள்