வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் கலெக்டர் ரத்னாவிடம் மனு அளித்தனர்.

Update: 2020-01-20 23:00 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 209 கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றார். இதில் செந்துறை அருகே உள்ள நல்லான்காலனி கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் கடந்த 1967-ம் ஆண்டு தமிழக அரசால் 24 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு, வீடுகள் கட்டித்தரப்பட்டது. அதன் பிறகு எங்கள் பகுதிக்கு எந்த ஒரு வீட்டுமனை பட்டாவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது குடும்பங்கள் அதிகரித்துள்ளதால், சுமார் 133 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா தேவைப்படுகிறது. இதற்காக பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

வேலை தருவதாக...

அரியலூரில் இயங்கி வரும் அரசு சிமெண்டு ஆலைக்கு சுண்ணாம்புக்கல் எடுக்க செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி கிராமத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு 52 விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது, நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ஆலையில் வேலை தருவதாக ஆலை நிர்வாகத்தினர் கூறியிருந்தனர். ஆனால், இதுவரை யாருக்கும் வேலை வழங்கவில்லை.

எனவே வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுண்ணாம்புக்கல் சுரங்கத்துக்கு நிலம் கொடுத்த ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர். மேலும், கலெக்டரிடம் சுமார் 200 வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கிச் சென்றனர். வேலை வழங்கப்படாத பட்சத்தில் விரைவில் ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படைப்போம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அலுவலருக்கு உத்தரவு

தொடர்ந்து பொதுமக்கள் அளித்த மனுக்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு மனு தாரருக்கு உரிய பதிலை வழங்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்று அந்த மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு உத்தரவிட்டார். பின்னர் சமூக பாதுகாப்புத்துறை சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் ரத்னா பாராட்டு தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்