கடும் உறைபனி: குன்னூரில் தேயிலை செடிகள் கருகின - விவசாயிகள் கவலை

கடும் உறைபனி காரணமாக குன்னூரில் தேயிலை செடிகள் கருகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2020-01-25 22:30 GMT
குன்னூர், 

குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் தான் அதிக அளவு மழை பொழிவு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக டிசம்பர் மாதத்தில் நீர் பனி பெய்ய தொடங்கியது. ஆனால் இந்த மாதம் ஆரம்பம் முதலே உறை பனி கொட்டியது.

குறிப்பாக கடந்த வாரத்தில் கடும் பனிப் பொழிவு இருந்தது. பகலில் வெயிலும் மாலை 4 மணிக்கு மேல் கடும் குளிராகவும் இருந்து வருகிறது. இரவில் பனி பெய்வதால் பொதுமக்களின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் மாலை 5 மணி அளவிலேயே பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி விடுகின்றனர்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தின் முக்கிய விவசாய பயிரான தேயிலை செடிகள் பணியினால் பாதிக்கப்பட்டுள்ளன. ஓடை பகுதியையொட்டியுள்ள தேயிலை தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள தேயிலை செடிகள் கருகி உள்ளன. இதனால் பச்சை தேயிலையின் மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. சிறு தேயிலை விவசாயிகள் பச்சை தேயிலை வரத்து குறைவடைந்ததாலும், விலை குறைவு ஏற்பட்டு உள்ளதாலும் கவலை அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

குன்னூர் பகுதியில் தற்போது கடும் உறைபனி கொட்டி வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தின் முக்கிய விவசாயமாக உள்ள தேயிலை செடிகள் கருகி வருகின்றன. குறிப்பாக மகசூல் கிடைக்காது என்பதால் எங்களுக்கு பெரிய அளவில் ந‌‌ஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே தேயிலை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்