திருவாரூரில், மனிதநேய வார விழா விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

திருவாரூரில் மனிதநேய வார விழா விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஆனந்த் கொடியசைத்து தெடாங்கி வைத்தார்.

Update: 2020-01-25 22:30 GMT
திருவாரூர்,

திருவாரூர் பழைய ரெயில் நிலையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஆனந்த கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசால் மனிதநேய வார விழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வருகிற 30-ந்தேதி வரை மனித நேய வார விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம், கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி, கலை நிகழ்ச்சி ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் சாதியற்ற சமூகம் படைக்கவும், மத வேறுபாடுகளை கலைந்து மனித நேயத்தோடு வாழ வலியுறுத்தப்படுகிறது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஊர்வலமானது பழைய ரெயில் நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று உதவி கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தது. இதில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், உதவி கலெக்டர் ஜெயபிரீத்தா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் பூ‌‌ஷ்ணக்குமார், முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்