திருமங்கலம் ரெயில்வே கேட்டில் பழுதாகி நின்ற சரக்கு ரெயில்; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருமங்கலத்தில் ரெயில்வே கேட்டில் சரக்கு ரெயில் பழுதாகி நின்றதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2020-01-25 22:00 GMT
திருமங்கலம், 

திருமங்கலம் ரெயில் நிலையத்தை அடுத்து பாண்டியன்நகர் மற்றும் விடத்தகுளத்தில் ரெயில்வே கேட்டுகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவில் தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சரக்கு ரெயில் ஒன்று பாண்டியன் நகர் ரெயில்வே கேட்டை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த ரெயில் பழுதாகி பாதி வழியில் நின்றது.

இதனால் 2 ரெயில்வே கேட்டுகளையும் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. ரெயில் நிலைய அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மதுரையில் இருந்து புனலூர் நோக்கி சென்ற ரெயில் திருமங்கலம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. சரக்கு ரெயில் சரிசெய்யப்பட்ட பின்பு 2 மணி நேரத்துக்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டது. 2 கேட்டுகளும் திறக்கப்பட்டன. புனலூர் செல்லும் ரெயிலும் புறப்பட்டது. இரவில் அடுத்தடுத்துள்ள ரெயில்வே கேட்டுகள் திறக்கப்படாததால் 2மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனத்தில் சென்றோர் காத்திருந்து சிரமம் அடைந்தார்கள்.

மேலும் செய்திகள்