வேலூரில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் தேசிய கொடியேற்றினார் - ரூ.3¾ கோடி நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன

வேலூரில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் சண்முகசுந்தரம் தேசிய கொடி ஏற்றிவைத்து, ரூ.3¾கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2020-01-26 22:30 GMT
வேலூர், 

இந்தியாவின் 71-வது குடியரசுதின விழா நேற்று கொண்டாடப்பட்டது. குடியரசுதின விழாவையொட்டி வேலூர் கோட்டை முன்பு உள்ள காந்திசிலைக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று காலை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றினார்.

அதைத்தொடர்ந்து வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடந்த குடியரசுதின விழாவில் கலெக்டர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு 8 மணிக்கு தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சமாதானத்தை வலியுறுத்தி வெண் புறாக்களையும், வண்ண வண்ண பலூன்களையும் அவர் பறக்கவிட்டார். பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டு, பின்னர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உடனிருந்தார்.

தொடர்ந்து சுதந்திரபோராட்ட தியாகிகள் மற்றும் மொழிப்போர் தியாகிகள் அமர்ந்திருந்த இடத்துக்கு சென்று அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, இனிப்பு வழங்கி கவுரவித்தார். சிறப்பாக பணிபுரிந்த 48 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களையும், சிறப்பாக பணிபுரிந்த அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, மத்திய கூட்டுறவு வங்கி, சமூகநலத்துறை உள்பட 13 துறைகள் சார்பில் 317 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 90 லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்கினார்.

பின்னர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வேலூர் ஈ.வெ.ரா. நாகம்மை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேலூர் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, சாய்நாதபுரம் வள்ளல் கிருஷ்ணசாமி சி.பி.எஸ்.இ. பள்ளி, சென்னாங்குப்பம் வித்யாலட்சுமி சி.பி.எஸ்.இ. பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

விழாவில் வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், திட்ட இயக்குனர் மாலதி, உதவி கலெக்டர் கணேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குடியரசுதின விழாவையொட்டி நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பலத்தபாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவுக்கு வந்தவர்களை போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து அனுப்பினர்.

மாநகராட்சி அலுவலகம்

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசுதின விழாவில் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேசிய கொடியேற்றினார். கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உதவி கமிஷனர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்