ரோடியர் மில்லை இயக்க வழிகாண வேண்டும் - அரசுக்கு கோரிக்கை

ரோடியர் மில்லை தொடர்ந்து இயக்க வழிகாண வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்டு எம்.எல். மாநில செயலாளர் சோ.பாலசுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-01-26 22:30 GMT
புதுச்சேரி,

ரோடியர் பஞ்சாலை ஏப்ரல் மாதம் 30-ந்தேதியுடன் மூடப்படுவதாக கவர்னர் உத்தரவின்பேரில் ஆலையின் மேலாண் இயக்குனர் பிரியதர்ஷிணி அறிவித்துள்ளார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு செயல்பாட்டில் உள்ளபோது அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் கவர்னர் ஆலையை மூட மேலாண் இயக்குனருக்கு பரிந்துரை செய்வது மக்களை முட்டாளாக்குவதுடன் ஜனநாயக ஆட்சிமுறையை கேலிக்கூத்தாக்குவது ஆகும்.

மேலாண் இயக்குனரின் ஆலையை மூடும் கோரிக்கையை அமைச்சரவை நிராகரித்து மேலாண் இயக்குனருக்கு தெரிவிக்கவேண்டும். ஆலையை புனரமைப்பு செய்து உற்பத்தியை தொடங்கும் எண்ணம் கவர்னருக்கும், அமைச்சரவைக்கும் இல்லை. நேரடியாகவும், மறைமுகமாகவும் இருவரும் கூட்டு சேர்ந்து ஆலையை மூடுவதற்கு வழிவகை செய்வதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டிக்கிறது.

கூட்டு சதி செய்து ஆலை இடத்தை விற்பனை செய்யும் முயற்சியே ஆலை மூடல் திட்டம். நிதி மேலாண்மையில் மத்திய அரசிடம் பரிசுபெற்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி மில்லை இயக்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யும் வழிமுறையை கண்டறிந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம், உற்பத்தியுடன் வேலை அளிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்