அவினாசி அருகே கிராமசபை கூட்டம் நடத்த தாமதம்: பொதுமக்கள் சாலைமறியல்

அவினாசி அருகே உப்பிலிபாளையத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர்.

Update: 2020-01-26 22:15 GMT
அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் உப்பிலிபாளையம் மாகாளியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று கிராமசபை கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நேற்றுகாலை 10 மணியாவில் கிராம பொதுமக்கள் அங்கு ஒன்று கூடினர்.

இந்த நிலையில் கிராமசபை கூட்டம் நடத்த அங்கு நேற்று பிற்பகல் 1 மணி வரை அதிகாரிகள் யாரும் வராததால் கிராமசபை கூட்டம் தொடங்கவில்லை. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த கிராம பொதுமக்கள் ஆத்திரமடைந்து கருவலூர் -அன்னூர் மெயின்ரோட்டில் பஸ் நிறுத்தம் அருகில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்)சாந்தி மீனாட்சி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமலிங்கம்,அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கிராமசபை கூட்டம் நடத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.இதனால் பொதுமக்கள் சாலை மறியலை விட்டனர். இதையடுத்து மதியம் 2.30 மணியளவில் கிராமசபை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில் பொதுமக்களின் கோரிக்கைகள் பெறப்பட்டு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி கூறினர். இந்த சாலைமறியலால் கருவலூர்-அன்னூர் ரோட்டில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்