தியாகதுருகம் அருகே பரபரப்பு, கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் முற்றுகை

தியாகதுருகம் அருகே கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள் கிராம சேவை மையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-01-26 22:00 GMT
கண்டாச்சிமங்கலம்,

குடியரசுதினத்தையொட்டி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. தியாகதுருகம் அருகே கொங்கராயபாளையம் கிராமத்தில் உள்ள கிராம சேவை மையத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் குமரவேல் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் தொடங்கியதும் குமரவேல் மற்றும் ஊராட்சி செயலாளர் கணேசன் ஆகியோரிடம் பொதுமக்கள் கடந்த கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் உள்ள பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினர். மேலும் கிராமத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் எதுவும் முறையாக நடைபெறவில்லை எனக் கூறி கிராமசபை கூட்டத்தை புறக்கனித்து கிராம சேவை மையத்தை முற்றுகையிட்டனர்.

இதுபற்றிய தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கணேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொங்கராயபாளையத்தில் இருந்து பிரிவு சாலை செல்லும்வரை மின்விளக்கு அமைத்து தர வேண்டும், தூர்ந்து போன கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும், தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் உள்ள விளையாட்டு மைதானம் மற்றும் மயானத்தை மீட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வலியுறுத்தினர்.அப்போது உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் கிராமசபை கூட்டத்தில் தீர்மானமாக வைக்கப்பட்டு உடனடியாக தீர்வுகான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கிராமத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தார். இதன் பின்னர் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமலிருக்க வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது.

தியாகதுருகம் அருகே கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்