சிவமொக்கா மாநகராட்சியை பா.ஜனதா மீண்டும் கைப்பற்றியது - மேயர்- சுவர்ணா சங்கர், துணை மேயர்- சுரேகா

சிவமொக்கா மாநகராட்சியை பா.ஜனதா மீண்டும் கைப்பற்றியுள்ளது. மேயராக சுவர்ணா சங்கரும், துணை மேயராக சுரேகாவும் தேர்வாகி உள்ளனர்.

Update: 2020-01-29 23:30 GMT
சிவமொக்கா, 

சிவமொக்கா மாநகராட்சி மேயராக கடந்த ஒரு ஆண்டாக பா.ஜனதா கட்சியை சேர்ந்த லதா கணேசும், துணை மேயராக சன்னபசப்பாவும் பதவி வகித்து வந்தனர். இவர்களது பதவிக்காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து சிவமொக்கா மாநகராட்சிக்கு புதிய மேயர், துணை மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 29-ந் தேதி காலை(அதாவது நேற்று) சிவமொக்கா மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்ற பா.ஜனதாவில் 2 பெண் உறுப்பினர்களுக்கு இடையே கடும் போட்டி எழுந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவமொக்கா டவுனில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் மந்திரி ஈசுவரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மேயர் பதவியை பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்கும், துணை மேயர் பதவியை பொது பிரிவினருக்கும் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பா.ஜனதா சார்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சுவர்ணா சங்கர் என்பவர் மேயர் பதவிக்கும், பொது பிரிவை சேர்ந்த சுரேகா என்பவர் துணை மேயர் பதவிக்கும் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

அதுபோல காங்கிரஸ் சார்பில் மேயர் பதவிக்கு யமுனா ரங்கேகவுடா என்பவரும், துணை மேயர் பதவிக்கு மெஹக் ஷெரீப் என்பவரும் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்து இருந்தனர். இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தபடி நேற்று காலை சிவமொக்கா மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து மேயர், துணை மேயரை ேதர்ந்து எடுக்க தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலை பெங்களூரு மண்டல வட்டார ஆணையர் என்.வி.பிரசாத் நடத்தினார். இந்த தேர்தலில் 35 உறுப்பினர்கள், 2 எம்.எல்.ஏ.க்கள், ஒரு எம்.எல்.சி. ஆகியோர் ஓட்டுபோட தகுதி ஆனவர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் ஓட்டுப்போட்ட பின்னர் நேற்று மதியம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதில் மேயர் பதவிக்கு போட்டியிட்ட சுவர்ணா சங்கர் 26 ஓட்டுகள் பெற்று வெற்றி வாகை சூடினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட யமுனா ரங்கேகவுடா 12 வாக்குகள் மட்டும் பெற்றார்.

அதுபோல துணை மேயர் பதவிக்கு போட்டியிட்ட சுரேகா 26 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மெஹக் ஷெரீப் 12 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். சுவர்ணா சங்கர், சுரேகாவின் வெற்றியை அதிகாரபூர்வமாக அறிவித்த தேர்தல் அதிகாரி என்.வி.பிரசாத் அவர்கள் 2 பேருக்கும் வாழ்த்து தெரிவித்து கொண்டார்.

மேலும் புதிய மேயர், துணை மேயருக்கு முன்னாள் மேயர், துணை மேயர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்