சித்ரதுர்கா மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு நியமனத்திற்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. கடும் எதிர்ப்பு
சித்ரதுர்கா மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ராதிகா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஆனால் அவரது நியமனத்திற்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.;
சிக்கமகளூரு,
கர்நாடகத்தில் சில ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி சித்ரதுர்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த அருண் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சித்ரதுர்கா மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ராதிகாவை மாநில அரசு நியமனம் செய்து உள்ளது.
ஆனால் ராதிகா நியமனத்திற்கு சித்ரதுர்கா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கூலிஹட்டி சேகர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சித்ரதுர்கா மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ள ராதிகா, இரியூரை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் உறவினர் ஆவார். அவரை சித்ரதுர்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்க வேண்டாம் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தேன். எனது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் அவரை மாநில அரசு நியமித்து உள்ளது.
இந்த மாவட்டத்தில் பா.ஜனதா சார்பில் 4 பேர் எம்.எல்.ஏ.க்களாக உள்ளோம். கடந்த சில மாதங்களாக ஏழை மக்கள் வீடு கட்டுவதற்கு ஆற்று மணலை வழங்க வேண்டும் என்று நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். எங்கள் போராட்டத்தை ராதிகா ஒடுக்க வாய்ப்பு உள்ளது. நாங்கள் மக்கள் பணியாற்றுவதற்கு ராதிகா இடையூறாக இருப்பார். அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்து நாங்கள் அடுத்த கட்டமாக முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.