10,168 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்

தேனியில் 10 ஆயிரத்து 168 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.;

Update:2020-02-02 04:15 IST
தேனி,

தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார்.

விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, 10 ஆயிரத்து 168 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 கோடியே 2 லட்சம் மதிப்பில் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் கருணை அடிப்படையில் 9 பேருக்கு கண்டக்டர் பணி நியமன உத்தரவுகளையும் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது கூறியதாவது:-

பள்ளிக் கல்வியில் மட்டுமின்றி, உயர் கல்வித் துறையிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. கடந்த 8 ஆண்டுகளில் 77 புதிய கல்லூரிகள் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றின் பலனாக, உயர் கல்வியில் மாணவர்கள் சேருவது 49 சதவீதமாக உயர்ந்து, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்கி வருகிறது.

பள்ளிக் கல்வித்துறையில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு 14 வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேனி மாவட்டத்தில் 105 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 99 பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பள்ளிகளில் விரைவில் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், பெரியகுளம் சப்-கலெக்டர் சினேகா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகாதேவி, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரிதா, அரசு போக்குவரத்து கழக திண்டுக்கல் மண்டல பொது மேலாளர் கணேசன், தேனி கோட்ட பொதுமேலாளர் சரவணக்குமார், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்