டாக்டர் ராமதாசுடன் முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கேட்டனர்

தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை முஸ்லிம் தலைவர்கள் சந்தித்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கேட்டனர்.

Update: 2020-02-01 23:00 GMT
திண்டிவனம்,

தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், தமிழ் மாநில தேசிய லீக், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் உள்ளிட்ட 22 இயக்கங்கள் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நேற்று திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்துக்கு சென்றனர். அங்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினர்.

அப்போது அவர்கள், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதற்கு எதிர்ப்பு தெரிவிதது போராடும் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பின்னர் டாக்டர் அன்புமணி ராமதாசிடம் கொடுக்குமாறு ஒரு மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட டாக்டர் ராமதாஸ், உங்களில் ஒருவன் நான், உங்களுக்காக குரல் கொடுப்பேன் என்றும், மற்ற கட்சியினரையும் குரல் கொடுக்க வைப்பேன் என்றார்.

பாகுபாடு கிடையாது

மேலும் டாக்டர் ராமதாஸ் கூறுகையில், நான் தொப்பி அணியாத முஸ்லிம். உங்களில் ஒருவன். உங்களை சிறுபான்மை என்று சொல்லாதீர்கள். இங்கு சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பாகுபாடு கிடையாது. கிராமத்தில் உள்ள ஒரு முஸ்லிம் குடும்பத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால், நாங்கள் எப்போதும் ஆதரவாக இருப்போம். தமிழகத்தில் அனைத்து உரிமைகளுடன் வாழ்வோம். அதற்கு போதிய பாதுகாப்பு பா.ம.க. அளிக்கும். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நானும் கவனித்து வருகிறேன் என்றார்.

அப்போது தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் காஜாமொய்னுதீன், பாகவி ஒருங்கிணைப்பாளர்கள் முகமது மன்சூர் காஸிமி, ப‌ஷீர் அகமது, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உள்பட 50-க்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்