ரூ.4¾ கோடி செலவில் கூடலூர் பஸ் நிலையம் புதுப்பிக்கப்படுகிறது - மாதிரி வரைபடம் வெளியீடு

கூடலூரில் ரூ.4¾ கோடி செலவில் பஸ் நிலையம் புதுப்பிக்கப்படுகிறது. இதையொட்டி மாதிரி வரைபடம் வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2020-02-05 22:15 GMT
கூடலூர்,

தமிழகம் மற்றும் கர்நாடகா- கேரளா மாநிலங்கள் இணையும் மையத்தில் கூடலூர் நகரம் அமைந்துள்ளது. இதனால் அண்டை மாநில பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கூடலூரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை காந்தி திடல் பகுதியில் பஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. அதன்பின்னர் கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து கழக பணிமனை, கிளை அலுவலகம் கட்டப்பட்டது. தற்போது 52 அரசு பஸ்கள் கூடலூர் பகுதியில் இயக்கப்படுகிறது. மேலும் கர்நாடகா, கேரள மாநில பஸ்கள் அதிகளவு இயக்கப்படுகிறது.

சீசன் காலங்களில் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் இயக்கப்படுகிறது. இதுதவிர நகர பகுதியில் மட்டும் சுமார் 2,500 ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. இதனால் ஆட்டோக்களின் நகரம் எனவும் அழைக்கப்படுகிறது. 3 மாநிலங்களின் இணைப்பு பகுதி என்பதால் கூடலூரில் போக்குவரத்து நெருக்கடியும் தவிர்க்க முடியாததாகி வருகிறது.

இந்த நிலையில் கூடலூர் நிலையத்துக்கு வரும் பஸ்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி கிடையாது. மேலும் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளும் மழை அல்லது வெயிலில் காத்து நிற்கும் அவல நிலையை காண முடிகிறது. போதிய இடவசதி இல்லாததால் வெளியூர்களில் இருந்து வரும் பஸ்களை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி திருப்பப்படுகிறது. இதனால் பஸ் நிலையம் முன்பு வாகன போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படுகிறது. இதனால் புதிய பஸ் நிலைத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையொட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர் நிதி, மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூ.75 லட்சம் வரை நிதி ஒதுக்கப்பட்டு ராட்சத தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டது.

ஆனால் போக்குவரத்து துறையில் நிதி இல்லாததால் தொடர்ந்து பணிகள் நடைபெறவில்லை. இதனால் தடுப்பு சுவர் கட்டிய நிலையில் பஸ் நிலையம் காணப்பட்டது. இதனால் நகராட்சி நிர்வாகத்திடம் நிதி கோரப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட பஸ் நிலையம் உள்ள இடம் போக்குவரத்து துறைக்கு சொந்தமானதாக இருப்பதால் நகராட்சி நிதியில் செலவிட முடியாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கூடலூர் பஸ்நிலைய நிலம் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.4¾ கோடி நிதி ஒதுக்கி போதிய இடவசதிகளுடன் புதுப்பிக்கும் பணியை விரைவில் தொடங்க உள்ளது. புதிய பஸ் நிலையத்தின் மாதிரி வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, புதிய பஸ் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாதிரி வரை படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில் பஸ்கள் நிறுத்துவதற்கு இடம், பயணிகள் அமருவதற்கு போதிய இடவசதி, பஸ்கள் உள்ளே வருதல் மற்றும் வெளியே செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. போக்குவரத்து பணிமனைக்கு என தனி பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் நிலையத்தை நகராட்சி நிர்வாகத்திடம் முறைப்படி ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் பணி தொடங்கப்படும்.

இவ்வாறு விளக்கம் அளித்தனர்.

மேலும் செய்திகள்