பள்ளி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: டி.வி. மெக்கானிக் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் டி.வி. மெக்கானிக் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2020-02-06 23:15 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் ராயர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. காமக்காபாளையத்தை சேர்ந்தவர் அன்புதுரை(வயது 46), குடிநீர் கேன் வினியோகம் செய்து வந்தார். வீரகனூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்(56). டி.வி. மெக்கானிக்கான இவர் வீரகனூர் பகுதியில் டி.வி. பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார்.

இவர்கள் 3 பேரும் கடைவீதி பகுதியில் அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம். இந்தநிலையில் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ந் தேதி இவர்கள் 3 பேரும் வீரகனூர் பகுதியை சேர்ந்த 9 வயதான 4-ம் வகுப்பு பள்ளி மாணவியிடம் சாக்லெட் வாங்கி தருவதாக கூறி அவளை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ராமசாமி, அன்புதுரை, பாஸ்கர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இதற்கிடையில் ராமசாமி உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

இந்தநிலையில் இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில், பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அன்புதுரை, பாஸ்கர் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.55 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு கூறினார். மேலும் இந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்