ஓமலூர் அருகே, உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் லாரி உரிமையாளர் அடித்துக்கொலை? போலீசார் விசாரணை

ஓமலூர் அருகே லாரி உரிமையாளர் மர்மமான முறையில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தார். அவர் தேர்தல் முன்விரோதத்தில் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-02-26 00:00 GMT
ஓமலூர்,

ஓமலூர் அடுத்த கோட்ட கவுண்டம்பட்டி பெரியாண்டிச்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் சூர்யா (வயது 27). இவர் சொந்தமாக மினிலாரி வைத்து ஓட்டி வந்தார்.

இவருடைய மனைவி சுகன்யா(26). இவர்களுக்கு மகா என்ற பெண் குழந்தை உள்ளது. மேலும் சுகன்யா தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு கோட்டகவுண்டம்பட்டியில் பாகல்பட்டி ரோட்டில் நிறுத்தி உள்ள தனது மினிலாரியில் சென்று படுத்துக்கொள்வதாக மனைவி சுகன்யாவிடம் கூறிவிட்டு சூர்யா வீட்டில் இருந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் இரவு 9.30 மணியளவில் சூர்யாவின் தம்பி சுரேந்திரனுக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய சூர்யா, ‘என்னை பாகல்பட்டி ரெயில் தண்டவாளத்தில் வைத்து சிலர் வெட்டுகிறார்கள் என்னை காப்பாற்று’ என்று கூறியுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவரது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

சாவு

உடனே அவருடைய தம்பி சுரேந்திரன் மற்றும் உறவினர்கள் பாகல்பட்டி ரெயில் தண்டவாள பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு தலையில் ரத்தக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சூர்யாவை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் இறந்தார்.

உறவினர்கள் போராட்டம்

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக, ஓமலூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு சூர்யாவின் உறவினர்கள் நேற்று காலையில் திடீரென முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் மற்றும் போலீசார் சூர்யாவின், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பவம் குறித்து புகார் கொடுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கொலையா? போலீசார் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக சூர்யாவின் மனைவி சுகன்யா, ஓமலூர் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக எனது கணவரை சிலர் அடித்துக்கொலை செய்து இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரை அடுத்து சூர்யா மர்மமான முறையில் இறந்துள்ளதாக கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்