மலேசிய விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: திருச்சியில் 127 பயணிகள் விடிய, விடிய தவிப்பு

மலேசிய விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப ேகாளாறு காரணமாக திருச்சியில் 127 பயணிகள் விடிய, விடிய தவித்தனர்.

Update: 2020-02-26 00:00 GMT
செம்பட்டு,

மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு திருச்சியில் இருந்து தினமும் ஏர் ஏசியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் இரவு 11.40 மணிக்கு திருச்சிக்கு வரும் இந்த விமானம், நள்ளிரவு 12.10 மணிக்கு திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்டு செல்லும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு திருச்சிக்கு இந்த விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் இறங்கிய பின்னர், வழக்கம்போல் விமானத்தின் ஊழியர்கள், விமானத்தை பரிசோதனை செய்தனர். அப்போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.

பயணிகள் தவிப்பு

இதைத்தொடர்ந்து மலேசிய விமானத்தில் பயணம் செய்ய இருந்த 127 பயணிகளும் திருச்சி வயர்லெஸ் சாலையிலுள்ள தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் விமானத்தில் உள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய மலேசியாவில் இருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் திருச்சிக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று காலை 9 மணிக்கு திருச்சிக்கு வந்து, தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். மாலை வரை விமானத்தின் கோளாறு சரிசெய்யப்படவில்லை. இதனால் அதில் பயணம் செய்ய இருந்த 127 பயணிகளும் செய்வதறியாது விடிய, விடிய தவித்தனர். பின்னர், நேற்று இரவு 9.30 மணிக்கு விமானம் புறப்படும் என்று விமான நிறுவனம் சார்பில் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். பின்னர் விமானத்தின் கோளாறு சரிசெய்யப்பட்டு நேற்று இரவு மலேசியாவுக்கு புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்