முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து துறையூரில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-02-25 23:45 GMT
துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி 22-வது வார்டுக்கு உட்பட்ட பகுதி காந்தி நகர். இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இப்பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை அகற்றிவிட்டு புதிய குழாய்கள் இணைப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மூடப்படாமல் உள்ளன. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நடந்து செல்வது கூட மிகவும் சிரமமாக இருப்பதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுபற்றி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் துறையூர்-திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது, 10 நாட்களில் சாலை சரிசெய்யப்படும் என்றும், முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் துறையூரில் இருந்து திருச்சி-பெரம்பலூர் மற்றும் ஆத்தூர் செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்