சேலம் மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எளிதான வாழ்க்கை குறித்து 1 லட்சம் கருத்துகள் பதிவு

சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எளிதான வாழ்க்கை குறித்து 1 லட்சம் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணையாளர் சதீஷ் தெரிவித்தார்.

Update: 2020-02-27 23:30 GMT
சேலம்,

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் சார்பில் ஸ்மார்ட் சிட்டியில் வசிக்கக்கூடிய பொதுமக்களின் வாழ்க்கை திறன், சமூக மேம்பாடு, குழந்தைகளுக்கான கல்வி தரம், சுகாதார மேம்பாடு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல வசதிகளை மேம்படுத்துவதற்கு ஏதுவாக ‘எனது நகரம் எனது பெருமை’ என்பதன் அடிப்படையில் சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எளிதான வாழ்க்கை குறித்த கருத்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதனை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் எளிதான வாழ்க்கை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவிகளுக்கு வழங்கினார்.

இதையடுத்து ஆணையாளர் சதீஷ் பேசியதாவது:-

1 லட்சம் கருத்துகள்

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எளிதான வாழ்க்கை குறித்த கருத்து கணக்கெடுப்பு கடந்த 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று(நேற்று முன்தினம்) வரை 1 லட்சம் பேர் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

இந்த கணக்கெடுப்பில் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். எனவே மாணவிகள் தங்களது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இதுகுறித்து தெரிவித்து அவர்களையும் இந்த கருத்து கணக்கெடுப்பில் பங்கேற்க செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் பாரதிதாசன், சுகாதார ஆய்வாளர்கள் சித்தேஸ்வரன், கந்தசாமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்