இன்றைய கால கட்டத்திற்கு ஏற்ப மாணவர்கள் மாற்று எரிபொருளை கண்டுபிடிக்க வேண்டும் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேச்சு

இன்றைய கால கட்டத்திற்கு ஏற்ப மாற்று எரிபொருளை கண்டுபிடிக்க மாணவர்கள் முன்வரவேண்டும் என்று காரைக்காலில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசினார்.

Update: 2020-02-28 23:59 GMT
காரைக்கால்,

காரைக்கால் மாவட்டம் திருவேட்டக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தின் (என்.ஐ.டி.) 6-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்காரி கலந்துகொண்டு 116 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

நம் நாட்டில் புதிய தொழில்நுட்ப சிந்தனைக்கு முக்கியத்துவம் தந்துகொண்டிருக்கிறோம். நமது மாணவர்கள் மிகச்சிறந்தவர்கள். உலக அளவில் மென்பொருள் பொறியாளர்களாக விளங்குகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் 10 டாக்டர்களில் 4 பேர் இந்தியர்கள். அதனால்தான் கூறுகிறேன், மாணவர்களுக்கு கல்வி மிக முக்கியம். புதிய கண்டுபிடிப்பிற்கான அறிவு அதைவிட முக்கியம்.

வளங்கள், தொழில்நுட்பம், கல்வி மிக முக்கியமாக இருந்தாலும், தொழில்முனைவோர் பண்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தகைய உயர்கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் இல்லை. அதனை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப, எத்தனால், மெத்தனால் போன்ற மாற்று எரிபொருளை கண்டுபிடிக்க மாணவர்கள் முன்வரவேண்டும். மின்சாரத்தில் இயங்கும் கார், பஸ் போன்றவற்றையும் உருவாக்க மாணவர்கள் முன்வரவேண்டும். விவசாயிகளும் தொழில் முனைவோராக மாறவேண்டும்.

நீரின் முக்கியத்துவத்தை பூர்த்தி செய்யவே, கடலில் வீணாகும் 1,200 டி.எம்.சி. தண்ணீரை தடுக்க கோதாவரி ஆற்றில் இருந்து கடைமடைக்கு ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பில் கிருஷ்ணா- பெண்ணாறு வழியாக 1,252 கிலோ மீட்டரில் உபரிநீர் கொண்டு செல்லும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராக இருக்கிறது.

மீத்தேன், எத்தனால், பயோ டீசல் ஆகியவற்றில் இயங்கும் 400 நவீன பஸ்கள் மராட்டிய மாநிலத்தில் 10 நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு 60 கோடி ரூபாய் மிச்சமாகும். மேலும், ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில், 2000 மெகா வாட் மின் உற்பத்தி திட்டம் தீட்டி உள்ளோம். இதன்மூலம், புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் ஒரு யூனிட் ரூ.2.30-க்கு வழங்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக தேசிய தொழில்நுட்ப கழக இயக்குனர் சங்கரநாராயணசாமி வரவேற்றார்.

சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட மத்திய மந்திரி நிதின் கட்காரி, காரைக்கால் வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் மைதானத்தில் உள்ள ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்கினார். அவரை முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பன்வால் மற்றும் பா.ஜனதாவினர் வரவேற்றனர்.

மேலும் செய்திகள்