எல்கர் பரிஷத் வழக்கில் புனே சிறையில் அடைக்கப்பட்ட 9 பேர் மும்பை என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்

எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு புனே சிறையில் அடைக்கப்பட்ட 9 பேரும் மும்பை என்.ஐ.ஏ. கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

Update: 2020-02-29 00:07 GMT
மும்பை, 

பீமா- கோரேகாவ் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி போர் வெற்றி தினத்தின் போது பயங்கர வன்முறை வெடித்தது. இந்த சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் அங்கு நடந்த எல்கர் பரிஷத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கூறி, புனே போலீசார் வழக்குப்பதிவு செய்து இடதுசாரி சிந்தனையாளர்கள் 9 பேரை கைது செய்தனர்.

சமீபத்தில் இந்த வழக்கு மீதான விசாரணையை மத்திய அரசு தேசிய புலனாய்வு முகமைக்கு(என்.ஐ.ஏ.) மாற்றிக்கொண்டது. இதையடுத்து எல்கர் பரிஷத் வழக்கு விசாரணையை புனே கோர்ட்டில் இருந்து மும்பை சிறப்பு கோர்ட்டுக்கு மாற்ற என்.ஐ.ஏ. கோரிக்கை வைத்தது. இதையடுத்து அந்த வழக்கு மீதான விசாரணை மும்பையில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

கோர்ட்டில் ஆஜர்

இந்தநிலையில் எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேந்திர காட்லிங், மகேஷ் ராவுத், ரோனா வில்சன், சுதீர் தவாலே, வரவரா ராவ், அருண் பெரிரா, சுதா பரத்வாஜ், சோமா சென் மற்றும் வெர்னோன் கோன்சால்வன் ஆகிய 9 பேரும் புனே எரவாடா ஜெயிலில் இருந்து கோர்ட்டில் ஆஜர்படுத்த மும்பை அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் நேற்று மும்பை என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து நீதிபதி டி.சி. கோதாலிகர் இந்த வழக்கு மீதான விசாரணையை அடுத்த மாதம் (மார்ச்) 13-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இடதுசாரி சிந்தனையாளர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை முன்னிட்டு மும்பை என்.ஐ.ஏ. கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்