கர்நாடக கே.எஸ்.ஆர். அணையில் தண்ணீர் திறப்பு: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2,500 கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடகாவில் உள்ள கே.எஸ்.ஆர். அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Update: 2020-02-29 23:30 GMT
பென்னாகரம்,

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு 5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடவேண்டும். அதன்படி இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான 5 டி.எம்.சி. தண்ணீர் தற்போது கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த 24-ந் தேதி நள்ளிரவு முதல் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக நேற்று அதிகாலை ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 10 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2,500 கனஅடியாக அதிகரிக்க தொடங்கியது.

சுற்றுலா பயணிகள் உற்சாகம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் வரை பாறைகளாக காட்சி அளித்த ஒகேனக்கல் காவிரி ஆறு கர்நாடக மாநிலத்தில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் வரத்து காரணமாக பாறைகள் தெரியாத படி தண்ணீர் செல்கிறது. ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்