விலங்குகள், பறவைகளுக்கு தொல்லை கொடுத்தால் வனத்துறைக்கு தகவல் தெரிவியுங்கள் மாணவர்களுக்கு அதிகாரி அறிவுறுத்தல்

விலங்குகள், பறவைகளுக்கு யாராவது தொல்லை கொடுத்தால் வனத்துறைக்கு தகவல் கொடுங்கள் என மாணவர்களுக்கு வனத்துறை அதிகாரி அறிவுரை வழங்கினார்.

Update: 2020-02-29 23:41 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி-கடலூர் சாலையில் வனத்துறை அலுவலகம் உள்ளது. இங்கு மான், குரங்கு, மயில், கிளி, பாம்பு உள்ளிட்ட விலங்குகள், பறவைகள் உள்ளன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் இங்கு களப்பயணம் வந்து விலங்குகள், பறவைகளை ஆர்வமுடன் பார்வையிட்டு வருகிறார்கள்.

வனத்துறையின் துணை வன காப்பாளராக வஞ்சுளா சமீபத்தில் பொறுப்பேற்றார். அவர், வனத்துறைக்கு களப்பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலங்குகள், பறவைகளை பாதுகாத்தல், மரம் வளர்ப்பு தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

அறிவுரை

இந்தநிலையில் வனத்துறை அலுவலகத்திற்கு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் களப்பயணம் வந்தனர். அப்போது துணை வன காப்பாளர் வஞ்சுளா மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவர், புதுச்சேரி சண்முகாபுரம் பகுதியில் குறவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கிளிகளை மாணவர்களிடம் காண்பித்தார்.

மேலும் அவர், கதைகள் மூலமாக விலங்குகள், பறவைகளின் குணாதிசயம் குறித்தும், அவற்றுக்கு நாம் தொந்தரவு கொடுக்கக்கூடாது, யாராவது தொல்லை கொடுத்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

மேலும் செய்திகள்