அயோத்தி தீர்ப்புக்கு எதிராக முகநூலில் கருத்துப்பதிவு: மணியரசன், பழ.நெடுமாறன் உள்பட 3 பேர் மீது வழக்கு

அயோத்தி தீர்ப்புக்கு எதிராக முகநூலில் கருத்துப்பதிவு செய்த மணியரசன், பழ.நெடுமாறன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2020-03-01 22:15 GMT
தஞ்சாவூர்,

அயோத்தி பிரச்சினை தொடர்பான வழக்கில் கடந்த நவம்பர் மாதம் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், தமிழக மக்கள் புரட்சி கழக பொதுச் செயலாளர் அரங்க.குணசேகரன் ஆகியோர் முகநூலில் கருத்துக்களை பதிவிட்டதாக கூறி தஞ்சை கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவகன் புகார் அளித்தார்.

அதன்பேரில் மணியரசன், நெடுமாறன், குணசேகரன் ஆகியோர் மீது கிழக்கு போலீசார் நேற்றுமுன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்குப்பதிவு

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் 66-ஏ(மின்னணு ஊடகம் மூலம் மக்களை தவறாக வழி நடத்துதல்), 72(ரகசிய தன்மை மற்றும் தனியுரிமையை மீறியது), 72-ஏ(சட்டப்பூர்வமான ஒப்பந்தத்தை மீறி தகவல்களை வெளியிடுதல்), இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 228(நீதித்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியருக்கு வேண்டுமென்றே அவமதிப்பு அல்லது குறுக்கீடு செய்தல்), 504(அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பது), 505(2)(பல்வேறு சமூகத்தினரிடையே பகை, வெறுப்பு அல்லது தவறான அறிக்கையை உருவாக்குதல் அல்லது ஊக்குவித்தல்) 3 மற்றும் 12(நீதிமன்ற அவமதிப்பு) ஆகிய பிரிவுகளின் கீழ் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்