பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா ரூ.2¼ கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழாவையொட்டி ரூ.2¼ கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

Update: 2020-03-01 22:15 GMT
மதுராந்தகம்,

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் 80-வது பிறந்தநாள் விழாவையொட்டி ஆன்மிக இயக்கம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு பகுதிகளிலும் இருந்து கொண்டுவரப்பட்ட ஆன்மிக ஜோதிகளுக்கு கடந்த மாதம் 29-ந்தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் கோ.ப.செந்தில்குமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கலச விளக்கு வேள்வி பூஜையை அவர் தொடங்கி வைக்க, இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் துணைத்தலைவர் ஸ்ரீ தேவி ரமேஷ் வேள்வியில் பங்கேற்றனர். விழாவையொட்டி நேற்று சித்தர் பீடம் வருகை தந்த பங்காரு அடிகளாருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. காலை 10¼ மணி முதல் மதியம் 2 மணி வரை இயக்க அரங்கில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக பங்காரு அடிகளாருக்கு பாதபூஜை செய்து ஆசி பெற்றனர்.

விழாவில் முக்கிய விருந்தினர்களாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன், வருமானவரித்துறை ஆணையாளர் ரெங்கராஜ் முதலியோர் கலந்து கொண்டார்கள். விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட விழா மலரை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் வெளியிட்டு உரை நிகழ்த்தினார். தொடர்ந்து பங்காரு அடிகளாரின் 80-வது பிறந்த நாளையொட்டி சிறப்பு தபால்தலையை செங்கல்பட்டு சரக தபால் நிலையங்களின் கண்காணிப்பாளர் விஜயா வெளியிட்டார். சதாபிஷேக சிறப்பு தபால்தலையை வருமான வரித்துறை ஆணையர் ரெங்கராஜ் முன்னிலையில் செங்கல்பட்டு சரக தபால் நிலையங்களின் மக்கள் தொடர்பு ஆய்வாளர் ராமமூர்த்தி வெளியிட்டார்.

முக்கிய பிரமுகர்களின் உரையைத் தொடர்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் பேருரையாற்றினார்.

விழாவில் மக்கள் நலப்பணிகளாக சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 80 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. கிராமங்களில் 80 கழிவறைகள் கட்டித்தரப்படுகின்றன.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 2,633 பயனாளிகளுக்கு ரூ.2¼ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் வழங்கினார். விழாவிற்கு வந்தவர்களை அறங்காவலர் ராே-ஐந்திரன் வரவேற்க, இயக்க இணைச்செயலாளர் சுரேந்திரநாத் நன்றி கூறினார்.

விழா ஏற்பாடுகளை இயக்கத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில், இயக்கத்தின் பல்வேறு அமைப்பினரும் சேலம், நாமக்கல் மாவட்ட ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினரும் சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்