அரக்கோணம் பகுதியில் ரூ.25 கோடியில் சாலை பணிகள்; அதிகாரிகள் தகவல்

அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அனைத்து சாலைகளையும் தரம் உயர்த்த அதிக நிதி ஒதுக்க வேண்டும் என சட்டசபையில் அரக்கோணம் தொகுதி உறுப்பினர் சு.ரவி பல முறை கோரிக்கை வைத்து பேசினார்.

Update: 2020-03-02 22:00 GMT
அரக்கோணம், 

 நடப்பு ஆண்டுக்கு சாலை அமைக்க ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியின்கீழ் சேந்தமங்கலத்தில் இருந்து நெமிலி வரை 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருவழிப்பாதையாக சாலை அமைக்கப்பட்டது. அதேபோல் அமீர்பேட்டை வரை புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டன. இந்த சாலைகள் தரமாக அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு உள்ளதா என ஆய்வு பணி நடைபெற்றது.

சென்னை கோட்ட பொறியாளர் ரமேஷ், கோட்ட உதவி பொறியாளர் சரவணன்,இளநிலைப் பொறியாளர் பாலாஜி, நெடுஞ்சாலை துறை கட்டுமான உதவி கோட்ட பொறியாளர் சித்தார்த்தன் ஆகியோர் நவீன கருவிகளுடன் ஆய்வுப்பணிகள் மேற்கொண்டனர். மேலும் சேந்தமங்கலம் – கணபதிபுரம், தணிகை போளூர் – இச்சிபுத்தூர், பணப்பாக்கம் –பள்ளூர், பாணாவரம் ஆகிய பகுதிகளில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், ‘‘நடப்பு ஆண்டில் நெடுஞ்சாலைத்துறை திட்டப் பணிகளுக்காக மொத்தம் ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 7 கோடி ரூபாய் செலவில் தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டது. மேலும் ரூ.18 கோடியில் தார்சாலைகள் அமைக்கும் பணி நடைபெற உள்ளது’’ என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்