ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க வேண்டும் - கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை

ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் ‌ஷில்பாவிடம், கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2020-03-02 22:00 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ‌ஷில்பா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

ராதாபுரம் அருகே உள்ள இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், கூடுதாழை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரளாக வந்தனர். அவர்கள், பாதிரியார் டேவிட் தலைமையில் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், “நெல்லை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் ஈரான் நாட்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். தற்போது ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு உள்ளது. இதில் ஏராளமானவர்கள் இறந்துள்ளனர். எனவே நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அங்கு இருந்து வர முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். எனவே ஈரான் நாட்டில் சிக்கி தவிக்கும் மீனவர்களை பாதுகாப்பான முறையில் சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “நெல்லையை அடுத்த ராமையன்பட்டியில் ஊராட்சிக்கு சொந்தமான சுமார் 30 சென்ட் இடத்தை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அந்த நிலத்தை மீட்டு, அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த இடத்தில் சத்துணவு கூடம் அல்லது நூலகம் அமைத்து தர வேண்டும். மேலும் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

வள்ளியூர் பகுதியை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலெக்டரிடம் தனித்தனியாக மனு கொடுத்தனர். அதில், எங்களுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “எங்கள் பகுதியில் ஏற்கனவே மகளிர் தங்கும் விடுதி கட்டியுள்ளனர். தற்போது அதன் அருகே மற்றொரு தங்கும் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் தங்கும் விடுதி கட்டக்கூடாது. அதற்கு பதிலாக சமுதாய நலக்கூடம் கட்ட வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை செல்வி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ரே‌‌ஷன் கார்டுகள் உள்ளன. நாங்கள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து ரே‌‌ஷன் கடைகளுக்கு செல்ல வேண்டியது இருக்கிறது. அதனால் எங்கள் பகுதியில் பகுதிநேர ரே‌‌ஷன் கடை அமைத்து தர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை மூலம் 6 பேருக்கு உலமா அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தின் மூலம் 15 பேருக்கு பட்டா வரன்முறை படுத்திகொடுக்கப்பட்டது. மொத்தம் 21 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கொடிநாள் வசூலில் சாதனை செய்த சங்கர்நகர் மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேற்கண்ட நலத்திட்ட உதவிகள், சான்றிதழை கலெக்டர் ‌ஷில்பா வழங்கினார்.

மனு கொடுக்க வந்தவர்கள் சிலர் பிளாஸ்டிக் பைகளை கொண்டு வந்தனர். அப்போது அவர்களிடம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது என கலெக்டர் அறிவுறுத்தினர். மேலும் அவர்கள் வைத்து இருந்த பிளாஸ்டிக் பைகளை வாங்கி கொண்டு, துணிப்பைகளை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மணி‌‌ஷ் நாரணவரே மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்