வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவிலில் வேடபரி திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவிலில் நடைபெற்ற வேடபரி திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பெரியகாண்டியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெறுகிறது.

Update: 2020-03-02 22:45 GMT
மணப்பாறை,

திருச்சி மாவட்டம் வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில்களின் மாசிப் பெருந்திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய திருவிழாவான வேடபரி திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி பெரியகாண்டியம்மன் கோவிலில் நேற்று மாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பின்னர் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் பொன்னர் அமர்ந்தபடி இருக்க குதிரை பூசாரி மாரியப்பன் குடைபிடித்து நின்று வந்தார். அதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட யானை வாகனத்தில் பெரியகாண்டியம்மன் அமர்ந்த படி இருக்க, பெரியபூசாரி செல்வம் குடைபிடித்தபடி நின்று வந்தார். இதில் பட்டியூர் கிராம ஊராளிக்கவுண்டர் சமூக முக்கியஸ்தர்கள் தலைமையில் இளைஞர்கள் குதிரை வாகனத்தை சுமந்து வந்தனர். காட்டையம்பட்டி கொடிக்கால்காரர்கள் வகை ஊர் முக்கியஸ்தர்கள் தலைமையில் இளைஞர்கள் யானை வாகனத்தை சுமந்து வந்தனர்.

வேடபரி

வாகனங்களுக்கு பின்னால் தங்காள் கரகம் சுமந்து வர சின்னபூசாரி கிட்டு, வேட்டை பூசாரி வீரமலை ஆகியோர் உடன் வந்தனர். நேற்று மாலை 6.25 மணிக்கு சாம்புவன் காளை முரசு கொட்டி முன்னே செல்ல, அதைத்தொடர்ந்து கோவில் வழக்கப்படி வீரப்பூர் ஜமீன்தார்களும், பரம்பரை அறங்காவலர்களுமான சுதாகர் என்ற கே.சிவசுப்ரமணிய ரெங்கராஜா, ஆர்.பொன்னழகேசன், சவுந்தரபாண்டியன், அசோக் பாண்டி, சுரேந்திரன் மற்றும் பட்டியூர் கிராம ஊர் முக்கியஸ்தர்கள் சென்றனர். அவர் களை தொடர்ந்து வேடபரி சாமிகளின் வாகனங்கள் சென்றன.

சாமி வாகனங்கள் வேடபரி செல்லும் வழியில் இளைப்பாத்தி மண்டபத்தில் நின்றன. குதிரை வாகனத்தில் பொன்னர் மட்டும் அணியாப்பூர் குதிரை கோவில் சென்று வேடபரி முடித்து, இளைப்பாத்தி மண்டபம் திரும்பினார். பின்னர் அனைத்து சாமியும் இளைப்பாத்தி மண்டபத்தில் வைக்கப்பட்டது. பின்னர் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு இளைப்பாத்தி மண்டபத்தில் இருந்து சாமிகள் புறப்பட்டு வீரப்பூர் பெரிய கோவிலை வந்தடைந்தது.

நீண்ட வரிசை

விழாவில் மணப்பாறை எம்.எல்.ஏ சந்திரசேகர், அ.தி.மு.க. மணப்பாறை ஒன்றியச்செயலாளர் வெங்கடாசலம், அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் செல்வராஜ், நகரச்செயலாளர் பவுன்.ராமமூர்த்தி மற்றும் விழாவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த குடிபாட்டுக்காரர்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று தெய்வங்கள் மீது மலர்மாலைகளை வீசி வழிபட்டனர்.

இளைப்பாத்தி மண்டபத்திலும் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். இதைத்தொடர்ந்து இன்று காலை வீரப்பூர் கோவில் முன்பிருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் பெரியகாண்டியம்மன் எழுந்தருள தேரோட்டம் நடைபெற உள்ளது. நாளை(புதன்கிழமை) மாலை சத்தாவர்ணம் என்ற மஞ்சள்நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்