கண்ணாடி கடை உரிமையாளர் கொலை வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு

கண்ணாடி கடை உரிமையாளர் கொலை வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2020-03-03 00:00 GMT
நாமக்கல்,

நாமக்கல் ராமாபுரம்புதூர் பெரியண்ணன் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 45). இவர் நாமக்கல்லில் உள்ள சேலம் சாலையில் கண்ணாடி கடை நடத்தி வந்தார். கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந் தேதி இவரை கடத்தி சென்ற மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 6½ பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு, அவரை கொலை செய்து பரமத்திவேலூர் அருகே உள்ள கட்டமராபாளையம் பகுதியில் உடலை வீசி சென்று விட்டனர்.

இதுதொடர்பாக அவரது மனைவி ஜெயலட்சுமி நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கரூர் மாவட்டம் தவிட்டுபாளையத்தை சேர்ந்த பிரபு என்கிற மங்காபிரபு (30), புலியூர் முருகானந்தம் (24), குப்புச்சிபாளையம் ராஜ்குமார் (24), வேலகவுண்டம்பட்டி தன்ராஜ் என்கிற தனராஜன் (30), தவிட்டுபாளையம் சிவா (30), கொமாரபாளையம் சுரே‌‌ஷ் (21) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

4 பேருக்கு ஆயுள் தண்டனை

இதுதொடர்பான வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தனசேகரன் வாதாடினார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட மங்காபிரபு, ராஜ்குமார், தன்ராஜ், சிவா ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி இளவழகன் தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேருக்கும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவ்வழக்கில் கைதான முருகானந்தம், சுரே‌‌ஷ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்