கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகை

கன்னியாகுமரி கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டனர். இதில் ஆஸ்டின் எம்.எல்.ஏ.வுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Update: 2020-03-02 23:30 GMT
கன்னியாகுமரி,

சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் கன்னியாகுமரியில் நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் உள்ளன.

கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. அந்த வீடுகளில் இருந்தும், தங்கும் விடுதிகளில் இருந்தும் வெளியேறும் கழிவுநீர் மற்றும் கழிவறை கழிவுகளும் மீனவர்கள் வசிக்கும் பகுதியான அலங்காரமாதா தெரு, சகாய மாதா தெரு வழியாக கன்னியாகுமரி கடலில் கலக்கிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மீனவர்கள் அவதி

கன்னியாகுமரியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் கட்டுமரம் மற்றும் வள்ளம் ஆகியவை அந்த பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

எனவே அதிகாலையில் படகுகளை எடுக்க செல்லும் மீனவர்கள் கழிவுநீரை கடந்தே செல்ல வேண்டியது இருக்கிறது. தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனால் மீனவர்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

முற்றுகை

இந்தநிலையில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகம் முன் நேற்று பகல் 11.30 மணிக்கு மீனவர்கள் திரண்டனர். அவர்கள் கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள். சிறிது நேரத்தில் பேரூராட்சி அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்கு பேரவை துணைத்தலைவர் நாஞ்சில் மைக்கேல் தலைமை தாங்கினார். பங்கு தந்தை ஜோசப் ரொமால்டு, இணை பங்கு தந்தைகள் சகாய வின்சென்ட், அன்பின் தேவ சகாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது மீனவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டனர். இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அப்போது தி.மு.க.வை சேர்ந்த ஆஸ்டின் எம்.எல்.ஏ., கன்னியாகுமரி நகர செயலாளர் குமரி ஸ்டீபன் ஆகியோரும் வந்து கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்ததும், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதே சமயம் குமரி பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன், கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ், குமரி மாவட்ட அனைத்து பேரூராட்சிகளின் உதவி என்ஜினீயர் இர்வின் ஆகியோரும் வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது, பேரூராட்சி பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளை ஆய்வு செய்து, 10 நாட்களுக்குள் மனித கழிவு வடிகாலில் கலக்காதவாறு தடை செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

கலைந்து சென்றனர்

மேலும் தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்து மீன்பிடி தொழில் செய்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு கழிவுநீரை பூமிக்கு அடியில் கொண்டு செல்ல 45 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் அறிவித்தனர்.

சுமார் 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அதை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்