அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிடங்களை திறக்க கரூருக்கு நாளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை

கரூருக்கு நாளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்து, காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்களை திறந்து வைக்கிறார். இதையொட்டி முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Update: 2020-03-03 23:00 GMT
கரூர்,

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 31-ந்தேதி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதனையடுத்து இங்கு முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்பிறகும் உள்நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைபிரிவு, கலைஅரங்கம், பணியாளர்கள் குடியிருப்பு என மற்ற சில கட்டிடங்களின் கட்டுமான பணிகள் நடந்தன.

தற்போது அது நிறைவுற்றதால், அந்த புதிய கட்டிடங்களை திறந்து வைப்பதற்காக கரூருக்கு நாளை (வியாழக்கிழமை) மதியம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார். கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.155 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்களை ரிப்பன் வெட்டி, அவர் திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறார். முதல்-அமைச்சரை வரவேற்கும் விதமாக கரூர் லைட் அவுஸ் அமராவதி பாலம், சுங்ககேட், காந்திகிராமம், தாந்தோணிமலை உள்ளிட்ட நகர்புற பகுதிகளில் அ.தி.மு.க. கொடி தோரணங்களாக கட்டப்பட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் கரூர் நகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.

அமைச்சர்கள் ஆய்வு

இதையொட்டி முன்னேற்பாடு பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். முதல்-அமைச்சரால் திறக்கப்பட உள்ள கலைஅரங்கம், பணியாளர்கள் குடியிருப்பு, உள்ளிருப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கான விடுதி கட்டிடங்கள், சிற்றுண்டியகம், சமையற்கூடம், உயர் மின்அழுத்த அறை உள்ளிட்ட கட்டிடங்களை அவர்கள் நேரில் பார்வையிட்டனர். அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மாவட்ட கலெக்டர் அன்பழகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனிடம் கேட்டு ஆலோசனை செய்தனர். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், கீதா எம்.எல்.ஏ., திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட ஊராட்சித்தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன், மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் வெங்கடசுப்பிரமணியன், கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.திருவிகா, கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் வி.சி.கே.ஜெயராஜ், ஊராட்சி துணைத்தலைவர் தானேஷ் என்ற முத்துக்குமார், கரூர் ஒன்றியத்தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

குளித்தலை

முதல்-அமைச்சரால் திறந்துவைக்கப்படவுள்ள அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கட்டிடமானது 7 தளங்களை உள்ளடக்கியதாகும். ரூ.10 கோடியே 65 லட்சம் மதிப்பில் சுமார் 800 பேர் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ள உள் அரங்கம் உள்ளிட்ட புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார். அதுமட்டுமல்லாது, குளித்தலை அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.5 கோடி மதிப்பிலும், வாங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலும் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்களையும் அவர் திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்