காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி

துபாரேவுக்கு சுற்றுலா வந்த தனியார் பள்ளி மாணவர்கள் 2 பேர் காவிரி ஆற்றில் மூழ்கி பலியானார்கள்.

Update: 2020-03-04 22:00 GMT
குடகு, 

குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகாவில் காவிரி நதிக்கரையில் துபாரே யானைகள் முகாம் அமைந்திருக்கிறது. இங்கு ஏராளமான காட்டுயானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பகுதி சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இங்கு பூங்கா, படகு சவாரி, விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை உள்ளன. இதனால் தினமும் இப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் விராஜ்பேட்டை தாலுகா கோணிகொப்பாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இருந்து 30 மாணவ-மாணவிகள் நேற்று துபாரேவுக்கு சுற்றுலா வந்தனர்.

பின்னர் அந்த மாணவ-மாணவிகள் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். அப்போது 2 மாணவர்கள் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அதைப்பார்த்த மீட்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் ரப்பர் படகு மூலம் ஆற்றுக்குள் சென்று அந்த மாணவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் ஆற்றில் மூழ்கி பலியாகினர்.

அதையடுத்து அவர்கள் 2 பேரின் உடல்களையும் மீட்பு குழுவினர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த சித்தாப்புரா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான மாணவர்களின் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆற்றில் மூழ்கி பலியானது 10-ம் வகுப்பு மாணவன் ஸ்ரேயாஸ்(வயது 15), 9-ம் வகுப்பு மாணவன் நளின்(14) என்பதும், அவர்கள் ஆற்றில் குளித்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி பலியாகிவிட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த 2 மாணவர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்