குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வன்முறை தேவையற்றது; சட்டசபையில் எடியூரப்பா பேச்சு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வன்முறை தேவையற்றது என்று சட்டசபையில் எடியூரப்பா கூறினார்.

Update: 2020-03-04 23:30 GMT
பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையில் நேற்று அரசியல் சாசனம் குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா பங்கேற்று பேசியதாவது:-

ஜனநாயகத்தில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு அதற்கே உரிய முக்கியத்துவம் உள்ளது. அதை காங்கிரஸ் உள்பட நாம் அனைவரும் மறந்துவிட்டோம். இந்த முக்கியத்துவத்தை பற்றி தெரிந்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவது தேவையற்றது என்று நான் நினைக்கிறேன். போராட்டம் நடத்துவது அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமை. ஆனால் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும்.

இந்த சட்டத்தை கண்டு பயப்படுவது, சந்தேகப்படுவது தேவையற்றது. அது அடிப்படையற்றது. அதற்கு அர்த்தமும் இல்லை. அரசியல் சாசனத்தை மாற்ற முயற்சி நடைபெறுவதாக அவ்வப்போது கூறுகிறார்கள். இது பொய். அரசியல் சாசனத்தை மாற்ற முடியாது. அரசியல் சாசனம் அமலுக்கு வந்து 70 ஆண்டுகள் ஆன பிறகும் மக்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் தீரவில்லை என்பது கவலை அளிப்பதாக உள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் அரசின் திட்டங்களை ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செலவழிக்க வேண்டும். குற்றங்கள் அதிகரித்து வருவதால், இரவு நேரங்களில் வாகனங்களில் பயணம் செய்ய பெண்கள் பயப்படுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ஆகும் என்ற நிலை உள்ளது.

இதை எப்படி சரிசெய்வது?. இத்தகைய கொள்கை அதிகரித்து வருகிறது. இதை பார்க்கும்போது கண்ணீர் வருகிறது. அரசு அலுவலர்கள் பணி இடமாற்றத்தில் லஞ்சம் கைமாறுகிறது. இதற்கு முடிவுகட்ட இந்த சபையின் உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார். 

மேலும் செய்திகள்