உக்கடம் மார்க்கெட்டில் சோதனை : கெட்டுப்போன 510 கிலோ மீன்கள் பறிமுதல் - உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை

உக்கடம் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை நடத்தி கெட்டுப்போன 510 கிலோ மீன்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2020-03-05 22:30 GMT
கோவை,

கோவை மாவட்டத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன்கள் மீது பார்மலின் என்ற வேதிப்பொருள் தெளிப்பதாகவும், கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்வதாகவும் புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ் செல்வன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன் வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து 4 குழுக்களாக சென்று சோதனை நடத்தினர்.

கோவை உக்கடத்தில் உள்ள மொத்த மற்றும் சில்லரை விற்பனை மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரி விஜயராஜா தலைமையில் உணவு பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர்.

அந்த மீன் மார்க்கெட்டில் பார்மலின் வேதிப்பொருள் தெளிக்கப்பட்ட 70 கிலோ மீன்கள், கெட்டுப்போன 430 கிலோ மீன்கள் உள்பட 510 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

பின்னர் அந்த கெட்டுப்போன மீன்களை உணவு பாதுகாப்புத் துறையினரே மருந்து ஊற்றி அழித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மீன்களின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் செய்திகள்