ஆட்சியில் அமருவதே எதிர்க்கட்சிகளின் கனவாக உள்ளது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

தமிழகத்தில் ஆட்சியில் அமர வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் கனவாக உள்ளதாக நாமக்கல்லில் நடந்த அரசு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

Update: 2020-03-06 00:00 GMT
நாமக்கல்,

நாமக்கல்லில் நேற்று அரசு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதுடன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

முன்னதாக விழாவிற்கு, தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரின் தீவிர முயற்சியின் காரணமாக தமிழகத்திற்கு 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெறப்பட்டு உள்ளது. ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நாமக்கல் மாவட்டமானது முட்டை உற்பத்தியில் இந்தியாவில் 2-வது இடத்திலும், கோழி வளர்ப்பில் இந்தியாவில் சிறப்பான இடத்திலும் உள்ளது.

வேளாண் மண்டலமாக

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு மக்களின் அன்றாட மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்களும் அதனால் பயன் அடைந்து வருகிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகளால் அதை பொறுத்து கொள்ள முடியவில்லை. காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்புக்கு அரசாணை பெற்று, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வரலாற்றில் பதிவு செய்தார். காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி தர மாட்டோம் என அரசு கூறியும், எதிர்க்கட்சிகள் நம்பவில்லை. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும்படி எதிர்க்கட்சிகள் கூக்குரல் எழுப்பின. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா எப்படி காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு அரசாணை பெற்று தந்தாரோ, அதேபோல் சட்டமன்றத்தில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தமிழக அரசு வரலாற்றில் பதிவு செய்தது.

எதிர்க்கட்சிகளின் கனவு

இந்த சட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தபோது, எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். அதன்மூலம் எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் மீது எந்த அளவுக்கு விரோதபோக்கு உள்ளது என்பதை அவர்கள் மூலமாகவே நாட்டுமக்கள் நன்கு அறிந்து உள்ளார்கள். அவ்வாறு வெளிநடப்பு செய்வது எந்த விதத்தில் நியாயம்?. எனவே எதிர்க்கட்சிகளுக்கு தமிழ்நாட்டின் மீதோ, தமிழக மக்கள் மீதோ, தமிழர்களின் நல்வாழ்வின் மீதோ, எந்தவித அக்கறையும் இல்லை. ஆட்சியில் அமர வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் கனவாக உள்ளது. பொய் பிரசாரம் மூலம் தவறான தகவல்களை நாட்டுமக்களிடம் பரப்புகின்றனர். உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பினாலும் அது எந்த காலத்திலும் எடுபடாது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சொன்னதை போல தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க. தான் ஆட்சி செய்யும்.

இவ்வாறு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

மேலும் செய்திகள்