பண்ருட்டி அருகே பரபரப்பு: வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் மீது தாக்குதல் - வாலிபரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி

வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரை தாக்கி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பண்ருட்டி அருகே நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2020-03-05 22:15 GMT
பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பம் கடைவீதியில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம், காவலர்கள் சிவக்குமார், பாலமுருகன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். மதுபோதையில் இருந்த அந்த வாலிபர், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது திடீரென அந்த வாலிபர், காவலர் சிவக்குமாரின் கன்னத்தில் அறைந்தார். இதை தடுத்த மற்றொரு காவலர் பாலமுருகனையும் அவர் தாக்கினார். மேலும் ஆபாசமாக திட்டிய அந்த வாலிபர், போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.

இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், தங்களது வாகனங்களில் விரைந்து சென்று, அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து, முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர், மானடிக்குப்பத்தை சேர்ந்த வரதராசு மகன் தமிழ்பாண்டியன்(வயது 24) என்பதும், வேன் டிரைவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தமிழ்பாண்டியனை போலீசார் கைது செய்து, பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். இ்நத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்