கொத்தனாரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை: சிதம்பரம் கோர்ட்டில் தீர்ப்பு

சிதம்பரம் அருகே கொத்தனாரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிதம்பரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2020-03-07 22:39 GMT
அண்ணாமலைநகர்,

சிதம்பரம் அருகே உள்ள அக்ராமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சிவக்குமார் என்கிற சுந்தரமூர்த்தி(வயது 32). இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ந்தேதி தனது வீட்டிற்கு தென்னங்கீற்றுகள் வாங்குவதற்காக அருகே உள்ள கன்னிகோவில் பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த தனது ஊரை சேர்ந்த மாரிமுத்து மகன் கொத்தனார் பாலமுருகன்(37) என்பவரிடம், கீற்று வாங்க எடுத்து வந்த பணத்தை கொடுத்துள்ளார்.

அந்த பணத்தில் இருவரும், மது வாங்கி குடித்துள்ளனர். பின்னர் பாலமுருகனிடம் சுந்தரமூர்த்தி தான் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டுக்கு சென்ற சுந்தரமூர்த்தி மீதி வைத்திருந்த மதுபானத்தை குடித்துவிட்டு பாலமுருகன் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கட்டிலில் படுத்திருந்த பாலமுருகனை கத்தியால் வெட்டியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

இதுகுறித்து பாலமுருகனின் தந்தை மாரிமுத்து ஒரத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். இந்த வழக்கு சிதம்பரம் 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்ததை அடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் பாலமுருகனை கொன்ற சுந்தரமூர்த்திக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி கருணாநிதி தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து சுந்தரமூர்த்தியை கடலூர் மத்திய சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்து சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஞானசேகரன் ஆஜரானார்.

மேலும் செய்திகள்